இந்தியா

சுப்ரீம் கோர்ட்

மேகதாது அணை விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

Published On 2022-06-07 23:19 GMT   |   Update On 2022-06-07 23:19 GMT
  • தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது.
  • மேகதாது என்ற இடத்தில் புதிய பிரம்மாண்ட அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது.

புதுடெல்லி:

தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 127.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நீர் பங்கீடை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது.

இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பருவமழை பெய்ததால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டில் 281 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்த அளவை விட 103.8 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாகும்.

இதற்கிடையே, மேகதாது என்ற இடத்தில் புதிய பிரம்மாண்ட அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை எடுத்துக் கொள்ள கர்நாடக அரசு தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யவோ, எவ்வித உத்தரவுகளையும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பிக்கவோ தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News