இந்தியா

கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு- அடுத்த மாதம் 4-ந்தேதி இறுதி விசாரணை

Published On 2025-01-23 08:25 IST   |   Update On 2025-01-23 08:25:00 IST
  • வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
  • இந்த வழக்கை முன்னுரிமை அளித்து பட்டிலிடுமாறு முறையிட்டனர்.

புதுடெல்லி:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும், பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனத்தில் கவர்னரின் குறுக்கீடு உள்ளது என்று கோரி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 17-ந்தேதி நடந்த விசாரணையின்போது, தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் நியமனத்தில் நிலவும் முட்டுக்கட்டை அடுத்த விசாரணைக்குள் தீர்ந்துவிட்டால் நல்லது. இல்லையென்றால் தீர்த்து வைக்கப்படும் எனத் தெரிவித்ததுடன், விசாரணையை ஜனவரி 22-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கை முன்னுரிமை அளித்து பட்டிலிடுமாறு முறையிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றைய தினம் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

Similar News