உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.. பீதியடைய வேண்டாம் - மத்திய அமைச்சர்
- அரிசி, கோதுமை, கொண்டைக்கடலை, பயறு, பட்டாணி போன்ற அனைத்தும் உள்ளன.
- சந்தைகளுக்கு விரைந்து சென்று வதந்திகளை நம்பி அதிகமாக செலவு செய்ய வேண்டாம்.
நாட்டில் உணவு தானியங்கள் மற்றும் அத்தியவசிய பொருட்களுக்குபற்றாக்குறை இருப்பதாக பரவும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மக்கள் பீதியடைந்து சந்தைகளில் அதிக அளவில் பொருட்களை வாங்கத் தேவையில்லை என்று மத்திய உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த அவர், "நாட்டில் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை. உண்மையில், போதுமானதை விட அதிகமாக கையிருப்பு உள்ளது. பஞ்சாபிலும் இதுபோன்ற தவறான செய்திகள் பரப்பப்படுவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது என்று தெரிவித்தார்
நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியுள்ளதாகவும், எல்லா இடங்களிலும் தேவைக்கு அதிகமாக இருப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அரிசி, கோதுமை, கொண்டைக்கடலை, பயறு, பட்டாணி போன்ற அனைத்து வகையான தானியங்களும் பருப்பு வகைகளும் தேசிய தேவைகளுக்கு அப்பாற்பட்ட அளவில் கிடைக்கின்றன என்று விளக்கினார்.
மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், சந்தைகளுக்கு விரைந்து சென்று வதந்திகளை நம்பி அதிகமாக செலவு செய்ய வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாகவும், விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.