தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரின் கேள்வி.. சீனா பற்றி பதிலளிக்காமல் நழுவும் மோடி அரசு - காங்கிரஸ்
- அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர்.
- 'மறுத்தல், திசைதிருப்புதல், பொய் கூறுதல், நியாயப்படுத்துதல்' என்ற கொள்கையை மோடி அரசு பின்பற்றி வருகிறது.
"எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது. அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகி விட்டனர்" என்று 2022 பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், "ஒரு உண்மையான இந்தியர் எல்லை விவகாரம் பற்றி இவ்வாறு ராணுவத்தை அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட மாட்டார்" என்று தெரிவித்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், ஜூன் 15, 2020இல் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களின் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக மோடி அரசு உண்மையை மறைத்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஒவ்வொரு தேசபக்த இந்தியரும் பல கேள்விகளை எழுப்பியுள்ள போதிலும், 'மறுத்தல், திசைதிருப்புதல், பொய் கூறுதல், நியாயப்படுத்துதல்' என்ற கொள்கையை மோடி அரசு பின்பற்றி வருகிறது.
2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் நாட்டிற்காக வீரதீரமாகப் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் பின்னர் பேசிய பிரதமர், சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று கூறினார்.
பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க மோடி அரசு எந்த சூழ்நிலையையும் உருவாக்கும். ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு அளித்த போதிலும் மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.