இந்தியா

கடைசி வாய்ப்பு கொடுக்கிறோம்.. தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்

Published On 2026-02-13 06:23 IST   |   Update On 2026-02-13 06:23:00 IST
  • 9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையா சிக்கியுள்ளார்.
  • 2016-இல் இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.

பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராகத் தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று விசாரித்தது.

அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்யாமல் வழக்கை விசாரிக்க முடியாது எனத் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்றால், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையா, நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த டிசம்பர் மாதமே நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

தற்போது அவருக்கு இது தொடர்பாகப் பதிலளிக்க கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதிகள் சந்திரசேகர் மற்றும் கௌதம் அங்கட் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

மல்லையா இந்தியா திரும்புவாரா என்பது குறித்த எழுத்துப்பூர்வமான பதிலை வரும் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையா, 2016-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.

அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.  

Tags:    

Similar News