இந்தியா

மகனை காப்பாற்ற துடிதுடித்த தாய்.. எவ்வளவோ கெஞ்சிய தந்தை.. மிதித்தே கொன்ற கும்பல் - வீடியோ

Published On 2024-10-15 12:04 IST   |   Update On 2024-10-15 12:04:00 IST
  • தசரா நாளில் புதிய கார் ஒன்றை ஷோரூமில் இருந்து வாங்கி தனது பெற்றோர்களுடன் புஷ்பா பூங்கா அருகே வந்துகொண்டிருந்தார்.
  • தனது மகனைக் காப்பாற்றுவதற்காக ஆகாஷ் மீது அவரது தாய் அப்படியே அரணாகப் படுத்துக்கொண்டார் .

மும்பையில் சிறிய பிரச்சனைக்காக இளைஞன் பெற்றோரின் கண்முன்னரே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள மாலத் பகுதி சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஆகாஷ் என்ற 28 வயது இளைஞர் தசரா நாளில் புதிய கார் ஒன்றை ஷோரூமில் இருந்து வாங்கி தனது பெற்றோர்களுடன் புஷ்பா பூங்கா அருகே வந்துகொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஆகாஷின் காரை ஓவர்டேக் செய்ய முயன்று லேசாக மோதியுள்ளது. இதனால் ஆகாஷுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆட்டோ ஓட்டுனரின் சகாக்கள் அந்த இடத்தில் கூடிய நிலையில் ஆகாஷ் அவர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டார். ஆகாஷை அந்த கும்பல் கீழே தள்ளி அடித்தும் உதைத்துள்ளது. தடுக்க முயன்ற ஆகாஷின் தந்தையும் தாக்கப்பட்டார்.

தனது மகனைக் காப்பாற்றுவதற்காக ஆகாஷ் மீது அவரது தாய் அப்படியே அரணாகப் படுத்துக்கொண்டார் . ஆனாலும் அடி உதை நின்றபாடில்லை. கடைசியாக ஆகாஷை உயிர்போகும் அளவுக்கு அடித்த பின்னரே அந்த கும்பல் ஓய்ந்துள்ளது.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகாஷ் மீது நடந்த தாக்குதல் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News