இந்தியா

முதல் மந்திரி அலுவலகத்துக்கு மர்மமாக வந்த கண்டெய்னர் லாரி- கட்டு கட்டாக பணம் இருந்ததாக குற்றச்சாட்டு

Published On 2024-03-28 05:54 GMT   |   Update On 2024-03-28 06:31 GMT
  • லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.
  • கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் தாடே பள்ளியில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. வழக்கமாக முகாம் அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பபடுகின்றன.

ஆனால் இந்த லாரி சோதனை எதுவும் செய்யப்படவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அங்கு நின்ற லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.

கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் இதுகுறித்து தேர்தல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்:-

ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகத்திற்கு வந்த லாரியில் கட்டு கட்டாக பணம் இருந்திருக்கலாம். அதனை எந்திரங்கள் மூலம் எண்ணி அனுப்பி வைத்துள்ளனர் அல்லது ஆந்திர பிரதேச தலைமை செயலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட கோப்புகள் கடத்தி வரப்பட்டு இருக்கலாம். ஒருவேளை லாரியில் போதைப்பொருட்கள் கூட இருந்திருக்கலாம் என கூறினார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மற்ற எதிர்க்க ட்சிகளும் இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில்:- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேவையற்ற ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள்.

பல அரசு துறைகள் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இயங்குகிறது. சம்பந்தப்பட்ட வாகனம் அலுவலகங்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்றிருக்கலாம்.

அவர்கள் சொல்வது போல பணம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. விசாகப்பட்டினத்தில் பிடிபட்ட போதை பொருள் நிரப்பப்பட்ட கண்டெய்னர் லோகேஷின் உறவினர்களுக்கு சொந்தமானது என்பது மக்களுக்கே தெரியும் என்றார்.

Tags:    

Similar News