இந்தியா

1947-லேயே பயங்கரவாதிகளை அழித்திருக்க வேண்டும்.. வல்லபாய் படேல் அறிவுரை புறக்கணிக்கபட்டது - மோடி

Published On 2025-05-27 15:53 IST   |   Update On 2025-05-27 21:00:00 IST
  • ஆனால் அவரது வார்த்தைகளை அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை.
  • இனி யாரும் இதற்கு ஆதாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை.

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.

மே 7 ஆம் தேதி, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

குஜராத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி பேசுகையில், "1947ல் இந்தியா பிரிக்கப்பட்டபோது அன்றிரவே, காஷ்மீர் மண்ணில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.

பாகிஸ்தான் முஜாஹிதீன் என்ற பெயரில் இந்தியாவின் ஒரு பகுதியை வலுக்கட்டாயமாக கைப்பற்றியது. அப்போதே முஜாஹிதீன்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் மீட்கும் வரை ராணுவ தாக்குதலை நிறுத்தக்கூடாது என அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்தினார்.

ஆனால் அவரது வார்த்தைகளை அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஆரம்பித்த இந்த முஜாஹிதீன்களின் ரத்தக்களரி 75 ஆண்டுகளாகத் தொடர்கிறது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் என்பது பினாமி போர் அல்ல. அவை பாகிஸ்தானால் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். அதுதான் அவர்களின் போர் உத்தி. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் போரை நடத்துகிறது பாகிஸ்தான்.

இந்தியாவின் சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பிரதமர் விளக்கினார். "ஆபரேஷன் சிந்தூர், 22 நிமிடங்களில் 9 பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இது கேமராக்கள் முன் நடந்தது. இனி யாரும் இதற்கு ஆதாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை" தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில் பிரதமர் மோடியின் கருத்துக்கள் வந்துள்ளன.

Tags:    

Similar News