பயங்கரவாதம்- நக்சலைட்டை எனது அரசு சகித்து கொள்ளாது: பிரதமர் மோடி பேச்சு
- கிழக்கு என்றால் அதிகாரம் அளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றம் என்று பொருள்.
- கடந்த10 ஆண்டுகளில் வடகிழக்கில் கல்வித்துறையில் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வடகிழக்கு நமது நாட்டின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகும். வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, வடகிழக்கின் பன்முகத்தன்மை அதன் பலமாக இருந்து வருகிறது.
வடகிழக்கு என்றால் உயிரியல் பொருளாதாரம், மூங்கில், தேயிலை உற்பத்தி, பெட்ரோலியம், விளையாட்டு, திறன், சுற்றுச்சூழல் சுற்றுலாவின் வளர்ந்து வரும் மையம் மற்றும் கரிமப் பொருட்களுக்கான புதிய உலகம் ஆகும்.
அது ஆற்றலின் சக்தி மையமாக உள்ளது. வடகிழக்கு நமக்கு அஷ்டலட்சுமி போன்றது.
எங்களுக்கு கிழக்கு என்பது வெறும் திசையல்ல. கிழக்கு என்றால் அதிகாரம் அளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றம் என்று பொருள்.
ஒரு காலத்தில் வடகிழக்கு ஒரு எல்லைப் பகுதி மட்டுமே என்று அழைக்கப்பட்டது. இன்று அது வளர்ச்சியின் முன்னணியில் மாறி வருகிறது. அங்கு சிறந்த உள்கட்டமைப்பு சுற்றுலாவை கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது.
வடகிழக்கில் ஒரு உள்கட்டமைப்பு புரட்சியை நாங்கள் தொடங்கினோம். அது இப்போது வாய்ப்புகளின் பூமியாக மாறி வருகிறது. வடகிழக்கு பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.
அதன் வளர்ச்சியை விரைவுபடுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த10 ஆண்டுகளில் வடகிழக்கில் கல்வித்துறையில் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, நக்சலிசமாக இருந்தாலும் சரி, எங்கள் அரசு சகித்து கொள்ளாது. வடகிழக்கு முன்பு குண்டுகள், துப்பாக்கிகள், ராக்கெட்டுகளுக்கு இடையே இருந்தது. அவை அங்குள்ள இளைஞர்களிடமிருந்து பல வாய்ப்புகளைப் பறித்தன. கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வன்முறையை கைவிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.