இந்தியா

சனாதன விவகாரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி.. சர்ச்சையை கிளப்பிய சாமியார்

Published On 2023-09-04 13:28 GMT   |   Update On 2023-09-04 13:28 GMT
  • உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார்.
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவிப்பு.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், அயோத்தியை சேர்ந்த துறவியின் அறிவிப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக இதே சாமியார் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால், ஜல சமாதி (நீரில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வது) அடைவேன் என்று 2021-ம் ஆண்டு அறிவித்து இருந்தார். ஆனால், இவர் அவ்வாறு செய்யவில்லை. அந்த வகையில், இவர் விளம்பரத்திற்காகவே இவ்வாறு செய்து இருப்பார் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News