ஆந்திராவில் மனைவி-மகளுடன் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- சுகாசினிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை அளித்தும் உடல்நிலை சீராகவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பெருப்பள்ளி மண்டலம் புதிய காரே கூடேமை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணா ராவ் (வயது 40). கூலி தொழிலாளி.
இவரது மனைவி சுகாசினி (35). மகன் கார்த்திக், மகள் அமிர்தா (16). கார்த்திக் பி.டெக் முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
சுகாசினிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை அளித்தும் உடல்நிலை சீராகவில்லை.
இதனால் தனது மனைவி விரைவில் இறந்து விடுவாரோ என எண்ணி வெங்கடகிருஷ்ணராவ் மனவேதனை அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வெங்கடகிருஷ்ண ராவ் தனது மனைவி மகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
கிருஷ்ணா மாவட்டம், திருவூருக்கு சென்று சாப்பிடுவதற்கு தேவையான உணவுப் பொருட்கள், குளிர்பானம் மற்றும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள கயிறு ஆகியவற்றை வாங்கினார்.
பின்னர் ஊருக்கு திரும்பிய 3 பேரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மாந்தோப்பிற்கு சென்றனர். அங்குள்ள மரத்தில் தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வெளியூர் சென்ற வெங்கடகிருஷ்ண ராவ் குடும்பத்தினர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அவர்களை பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.
இரவு நீண்ட நேரமாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை மீண்டும் தேடிப் பார்த்தபோது மாந்தோப்பில் 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.