இந்தியா

நகரி தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெறுவேன்- ரோஜா

Published On 2024-04-20 04:49 GMT   |   Update On 2024-04-20 04:49 GMT
  • ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார்.
  • நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் 3-வது முறையாக ரோஜா போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக ரோஜா நகரி புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். வேட்பு மனுவை கோவிலில் வைத்து மனமுருக சாமி தரிசனம் செய்தார்.

அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி ரோஜா நகரி தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றார். இதில் ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வழி நெடுகிலும் கிரேன் மூலம் சுமார் 20 அடி உயரம் கொண்ட ராட்சத மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மலர் மாலை என ரோஜாவுக்கு விதவிதமான மாலைகள் கிரேன் மூலம் அணிவித்து வரவேற்றனர். செண்டை மேளம், தாரை தப்பட்டை மேளங்களுடன் ரோஜா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்.


அப்போது ஜெய் ரோஜாம்மா என தொண்டர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் நகரி சாலை அதிர்ந்தது.

இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சென்று ரோஜா மனு தாக்கல் செய்தார்.

நகரி தொகுதியில் நான் 3-வது முறையாக போட்டியிடக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் சதி செய்தன. எனக்கு சீட் கிடைக்காமல் செய்ய பலர் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்தனர்.

ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார். நான் இந்த தொகுதியில் 3-வது முறையாகவும் வெற்றி பெறுவேன். மனு தாக்கலின் போது இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.

இங்கு வந்துள்ள நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News