இந்தியா

அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு ஒரு மாதம் கெடு

Published On 2023-03-25 07:06 GMT   |   Update On 2023-03-25 07:06 GMT
  • மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது.
  • தகுதி நீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் அவர் பங்களாவை காலி செய்ய வேண்டும்.

புதுடெல்லி:

2019-ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். இதுபற்றி குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட கோர்ட்டில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.பூர்னேஷ்மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நேற்று முன்தினம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கியது.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி அவரது பதவியை பறிக்க பாராளுமன்ற செயலகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து நேற்று பிற்பகல் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலகம் அறிவித்தது.

இந்நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது.

தகுதி நீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் அவர் பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்றால் பங்களாவை காலி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி டெல்லியில் எண்.12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News