இந்தியா

பிரியங்கா காந்தி வருகிற 20-ந்தேதி கேரளாவில் பிரசாரம்

Published On 2024-04-16 05:37 GMT   |   Update On 2024-04-16 05:37 GMT
  • வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தனது தொகுதியில் ரோடு-ஷோ சென்று ஆதரவு திரட்டினார்.
  • பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

பெரும்பாலான தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 8 நாட்களே இருப்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சி இருந்துவரும் நிலையில், கேரளாவில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் அங்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் எதிரெதிராக இருந்து மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கேரளாவில் வயநாடு, திருவனந்தபுரம், அட்டிங்கல், பத்தினம்திட்டா, மாவேலிக்கரை, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், சாலக்குடி, ஆலத்தூர், பாலக்காடு, கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், காசர்கோடு ஆகிய 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அந்த தொகுதிகள் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தனது தொகுதியில் ரோடு-ஷோ சென்று ஆதரவு திரட்டினார். பின்பு அவர் தேர்தல் பிரசாரத்தை நேற்று மீண்டும் தொடங்கினார்.

அவர் நேற்று வயநாட்டில் ரோடு-ஷோ சென்றது மட்டுமின்றி, கோழிக்கோடு கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். ராகுல் காந்தி கேரளாவில் தொடர்ந்து ஒரு வாரம் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

அவர் வயநாடு தொகுதியில் இன்று 2-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஆதரவு திரட்டுகிறார்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரியங்கா காந்தி வருகிற 20-ந்தேதி கேரளா வருகிறார். அவர் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, சாலக்குடி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரியங்கா காந்தியும் கேரளா வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News