இந்தியா

2014-ல் நம்பிக்கை, 2019-ல் உறுதி, 2024-ல் உத்தரவாதம்- பிரதமர் மோடி பேச்சு

Published On 2024-04-17 09:11 GMT   |   Update On 2024-04-17 09:11 GMT
  • 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்தோம்.
  • அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான முயற்சிகளை பா.ஜனதா மேற்கொண்டது.

கவுகாத்தி:

பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை அசாம் மாநிலம் நல்பாரியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று வரலாற்று சிறப்புமிக்க ராம நவமி விழாவாகும். 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு ராமர் இறுதியாக தனது பிரமாண்ட கோவிலில் அமர்ந்தார்.

புனித நகரமான அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ராமருக்கு சூரிய திலகம் பூசி கொண்டாடப்பட்டது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்கு தகுதியான வசதிகளை வழங்க தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் இவை கிடைக்கும்.

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளேன். எந்த பாரபட்சமும் இல்லாமல் சிசிக்சை மேற்கொள்ளப்படும்.

இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு மாநிலங்களே சாட்சி.

காங்கிரஸ் கட்சியால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்சனைகள் மட்டுமே கொடுக்க முடிந்தது. காங்கிரஸ் பிரிவினைவாதத்தை தூண்டியது. அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான முயற்சிகளை பா.ஜனதா மேற்கொண்டது.

60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்தோம்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற மந்திரத்தை பின்பற்றும் கட்சி பா.ஜனதா. 2014-ல் நம்பிக்கையையும், 2019-ல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்தேன். 2024-ம் ஆண்டு உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன். இது மோடியின் கேரண்டி.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கூட்டத்தின் போது அவர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டார். கூடி இருந்தவர்களும் பதில் முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News