லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை
பாராளுமன்றம் வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் ஸ்ரீநகரில் சிக்கியிருப்பதால், பாராளுமன்றத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையில் காங்கிரஸ் பாராளுமன்றக் கட்சியின் (சிபிபி) தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடரில் தனது சட்டமன்ற நிகழ்ச்சி நிரலை முன்வைக்க அரசு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பதிவேடுகளின்படி, தற்போது மாநிலங்களவையில் 26 மசோதாக்களும், மக்களவையில் 9 மசோதாக்களும் நிலுவையில் உள்ளன.
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புறப்பட்டார். பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவரை குதிரைப்படை அழைத்து சென்றது. பின்னர் அவர் குதிரைப்படை புடை சூழ காரில் பாராளுமன்றத்திற்கு புறப்பட்டார்.
கூட்டத்தொடருக்கு முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய பட்ஜெட் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகிற்கே முக்கியமாக பார்க்கப்படுகிறது. நாட்டு மக்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும். உலகளாவிய நம்பிக்கை ஒளிக்கீற்று இந்த பட்ஜெட்டின் மீது உள்ளது. நாடு முழுவதும் பெருமைப்படும் வகையில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்ற உள்ளார். ஜனநாயகத்திற்கு மிகவும் கௌரவமான விஷயம் இது" என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் குடியரசுத் தலைவர் உரையில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. சீரற்ற வானிலை காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாக புறப்படுவதால் குடியரசுத் தலைவர் உரையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் கே.கேசவ ராவ், "பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியின் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிப்பதாகக்" கூறினார். இதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் ஜனாதிபதியின் உரையை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் அமர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறுகிறது. முதல் பகுதி வரும் பிப்ரவரி 13ம் தேதி அன்று முடிவடைகிறது. இரண்டாம் பகுதி மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது.