இந்தியா

ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Published On 2024-04-08 09:45 GMT   |   Update On 2024-04-08 09:45 GMT
  • சந்திரபாபு நாயுடு வெளியே வந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்காக ஏங்குகிறார்.
  • தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.

சினிமா படங்களில் வரும் கொடூரமான பாத்திரங்களை நினைவூட்டி சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பஸ் யாத்திரை மூலம் பிரசாரம் செய்து வரும் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில்:-

சந்திரபாபு நாயுடு மக்களை ஏமாற்றுவதை தொழிலாக கொண்டுள்ளார். மக்களை ஏமாற்றும் பழக்கம் கொண்ட குற்றவாளியான சந்திரபாபு நாயுடுவுக்கும் மக்களுக்குமான போர் இந்த தேர்தல்.

சந்திரபாபு நாயுடு வெளியே வந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்காக ஏங்குகிறார். அருந்ததி சினிமா படத்தில் ஒரு கல்லறையில் பேயாக பல ஆண்டுகள் வில்லன் காத்திருப்பார். பின்னர் வெளியே வந்து பழி வாங்குவார். அதே போல சந்திரபாபு நாயுடு செயல்பாடும் உள்ளது எனக் கூறினார்.


இது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது. இது குறித்து தெலுங்குதேசம் கட்சித் தலைவர் வர்லராமையா தேர்தல் ஆணையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதுவதாக கூறி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 48 மணி நேரத்திற்குள் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பதில் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்த சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News