இந்தியா

பொது சிவில் சட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு- அ.தி.மு.க.வும் ஆதரிக்க தயங்குகிறது

Published On 2023-06-29 06:11 GMT   |   Update On 2023-06-29 06:11 GMT
  • பொது சிவில் சட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆதரவை தெரிவித்து உள்ளது.
  • சிவசேனா கட்சியும் பொது சிவில் சட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருகிறது.

இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த 14-ந்தேதி முதல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் அவசியம் என்று கூறினார். நாட்டில் இரு விதமான சட்டங்களால் நிர்வாகம் செய்ய இயலாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்பதால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

இதற்கு நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று முன்தினம் இரவே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி தனது எதிர்ப்பை வெளியிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து உள்ளன.

இதற்கிடையே பொது சிவில் சட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆதரவை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. சந்தீப் பதக் கூறுகையில், ' கொள்கை அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி ஆதரிக்கிறது. என்றாலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.

சிவசேனா கட்சியும் பொது சிவில் சட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம், தி.மு.க ஆகிய கட்சிகள் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளன. பெரும்பாலான கட்சிகள் இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகின்றன.

பொது சிவில் சட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறி இருப்பதாவது:-

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறி இருப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக உள்ளது.

நாட்டில் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர விரும்பினால் முதலில் அதை இந்து சமுதாயத்திடம் இருந்து தொடங்க வேண்டும். இந்து சமுதாயத்தில் இன்னமும் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன.

இந்துக்கள் பல ஊர்களில் கோவில்களில் நுழையும் உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாமி கும்பிடும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. அவர்கள் பூஜை செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை.

அனைத்து இந்துக்களும் சாதி மாறுபாடுகளை கடந்து, அனைத்து கோவில்களிலும் பூஜைகள் செய்ய, வழிபாடுகள் நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். முதலில் இந்துக்களிடம் இந்த ஒற்றுமை உருவாகட்டும்.

இவ்வாறு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை அ.தி.மு.க. தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க அ.தி.மு.க. தலைவர்களும் தயங்குகிறார்கள். என்றாலும், இந்த விஷயத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கருத்தில் கொண்டு அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இது தொடர்பாக கேட்டபோது, 'பொது சிவில் சட்டம் குறித்து கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய முடிவு எடுப்பார். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம். எனவே அவர் முடிவை எடுத்து அறிவிப்பார்' என்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பொது சிவில் சட்டத்துக்கு அ.தி.மு.க.வும் தனது எதிர்ப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News