குடும்பத்துடன் பேச அனுமதி கோரிய தஹாவூர் ராணா.. மனுவை தள்ளுபடி செய்த NIA நீதிமன்றம்
- குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று வாதிட்டார்.
- ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது.
தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கோரி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய தொழிலதிபர் தஹாவூர் ராணா, ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தால் 18 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கேட்டு ராணா பாட்டியாலா என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 19 இல் மனுதாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
ராணாவின் சட்ட ஆலோசகர் பியூஷ் சச்தேவா, ஒரு வெளிநாட்டவர் என்ற முறையில், காவலில் இருக்கும் போது தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கவலைப்படும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று வாதிட்டார்.
இருப்பினும், தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) இந்தக் கோரிக்கையை எதிர்த்தது, நடந்து வரும் விசாரணையை மேற்கோள் காட்டி, ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் சிறப்பு NIA நீதிபதி சந்தர் ஜித் சிங், தஹாவுர் ராணா குடும்பத்தினருடன் பேச அனுமதி மறுத்து அவரது மனுவை நிராகரித்தார்.