இந்தியா

பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: சித்தராமையா

Published On 2023-02-07 09:16 IST   |   Update On 2023-02-07 09:16:00 IST
  • கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கும்.
  • எடியூரப்பாவுக்கும், பசவராஜ் பொம்மைக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு :

பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யக்கூறி நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள். ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையோ, கட்சி மேலிடமோ ஆர்வம் காட்டவில்லை. இதன் ரகசியம் என்ன என்று எனக்கு தெரியும்.

எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்குமாறு கேட்டிருந்தார். தற்போது மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால், எடியூரப்பாவின் மகனுக்கு மந்திரி பதவியை கொடுக்க வேண்டி இருக்கும் என்ற காரணத்தால் பா.ஜனதாவினர் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாமல் இருக்கிறார்கள். இதன்மூலம் பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.சின் பேச்சை கேட்டுக்கொண்டு எடியூரப்பாவை தரம் தாழ்த்த பார்க்கிறார்கள். தற்போது எடியூரப்பாவுக்கும், பசவராஜ் பொம்மைக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் எடியூரப்பாவின் மகனுக்கு மந்திரி பதவி கொடுக்காதது தான். கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக மந்திரிசபையில் 6 இடங்களை காலியாக வைத்திருக்கும் பசவராஜ் பொம்மை, முக்கியமான துறைகளை தன்னிடமே வைத்திருப்பது ஏன்?.

ஏனெனில் அப்போதுதான் அவரால் பல்வேறு ஊழல்களில் ஈடுபட முடியும். மொத்தம் உள்ள துறைகளில் 4-ல் ஒரு பங்கு துறைகள் பசவராஜ் பொம்மையிடமே உள்ளன. அவற்றை விட்டுக்கொடுக்க அவரால் முடியாது. பசவராஜ் பொம்மை, கட்சி மேலிட தலைவர்களிடம் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அழுத்தம் கொடுத்தால் கண்டிப்பாக அனுமதி கிடைக்கும். ஆனால் அதை அவர் செய்ய மாட்டார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News