இந்திய கடற்படை ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு விற்பனை... உ.பி.யை சேர்ந்த இருவர் கைது!
- இந்திய கடற்படையின் ரகசிய தகவல்கள் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானுக்கு விற்பனை
- இந்திய கடற்படை கப்பல்கள் கேரளாவில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் (20) மற்றும் சாண்ட்ரி (37) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் மல்பே பிரிவில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கப்பல் கட்டும் தளத்தின் ரகசிய தகவல்கள் வெளியில் கசிவதாக, ஊழியர்கள் மீது மல்பே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஊழியர்களை கண்காணித்து இருவரையும் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ரோஹித்-தான் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக மால்பே பிரிவில் இன்சுலேட்டராக பணிபுரிந்த ரோஹித், கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரிந்த தனது கூட்டாளி சாண்ட்ரி உடன் இணைந்து இந்திய கடற்படை கப்பல்களின் ரகசிய பட்டியல், அவற்றின் அடையாள எண்கள், மத்திய அரசின் கீழ் உள்ள துறைமுகங்கள், கப்பல் கட்டும் தள நடவடிக்கைகள் மற்றும் கடற்படை கப்பல்கள் போன்றவற்றின் விவரங்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் மற்றும் பிறநாடுகளுக்கு கொடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மால்பே பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகும், ரோஹித் சாண்ட்ரியிடமிருந்து தகவல்களைப் பெற்று வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்படை கப்பல்கள் கேரளாவில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மல்பே பிரிவு தனியார் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக கப்பல்களை உற்பத்தி செய்கிறது.