இந்தியா

சுருக்குமடி வலையை பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2023-01-24 08:35 GMT   |   Update On 2023-01-24 08:41 GMT
  • தமிழக அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
  • மீனவர்கள் தங்கள் படகுகளில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தியிருக்க வேண்டும்.

புதுடெல்லி:

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க மீனவர்களுக்கு தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு தடை விதித்தது.

அரிய வகை உயிரினங்கள், மீன் குஞ்சுகள், பவளப்பாறைகள் சிக்கி கொள்வதால் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவை எதிர்த்து மீனவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசின் உத்தரவு சரியானது என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. அப்போது மீனவர்கள் தரப்பில் கூறும்போது, தாங்கள் 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை தாண்டி சுருக்குமடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரும் என்று தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் கூறும்போது, தமிழ்நாட்டின் அதிகார வரம்புக்குள் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இயற்கை வளங்களும் அழிகின்றன.

ஆயிரக்கணக்கான படகுகள் செல்வதால் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால்தான் சுருக்குமடி வலையால் மீன் பிடிக்கிறார்கள் என்பதை கண்காணிப்பது மிக கடினம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான பெஞ்ச் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது:-

வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 நாட்டிக்கல் மைல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

தமிழக அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சுருக்குமடி வலையுடன் காலை 8 மணிக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்குள் மீனவர்கள் திரும்பி விட வேண்டும்.

மீனவர்கள் தங்கள் படகுகளில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தியிருக்க வேண்டும். நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் சமமான பலனை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நிபந்தனைகளை மீறி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறி உள்ளனர்.

அதே வேளையில் தமிழகத்தில் 12 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட கடல் பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்த தமிழக அரசாணைக்குள் தற்போதைய நிலையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்தனர்.

இதனால் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான பிரதான வழக்கின் விசாரணை இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News