கர்நாடகா: மலைக் குகைக்குள் 2 மகள்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ரஷிய பெண் - வினோத சம்பவம்
- தன் குழந்தைகளும் தியானம் செய்து வருவதாக அப்பெண் தெரிவித்தார்.
- ரஷியாவுக்கு திருப்பி அனுப்ப நடவ்டிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகாவின் கோகர்ணாவில் பிரசித்தி பெற்ற ராமதீர்த்த மலை உள்ளது. இந்த மலையின் அபாயகரமான குகை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ரஷிய பெண்ணும் அவரது 6 மற்றும் 4 வயது மகள்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
புதன்கிழமை மாலை, கோகர்ணா காவல்துறையினர் ராமதீர்த்தத்தில் ரோந்து சென்றபோது, தற்செயலாக அந்தப் பெண்ணையும் அவரது குழந்தைகளையும் கண்டனர்.
புனித யாத்திரைத் தலமான அங்கு தானும் தன் குழந்தைகளும் தியானம் செய்து வருவதாக அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.
இந்த பகுதியில் கடந்த 2024 ஜூலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் விஷப்பாம்புகள் அபாயம் உள்ள இங்கு அவர்கள் இருப்பது ஆபத்தானது என்று போலீசார் அப்பெண்ணிடம் விளக்கினர்.
விசாரணையில், அப்பெண் 2017 இல் வணிக விசாவில் இந்தியா வந்து, 2018 இல் நேபாளம் சென்று மீண்டும் திரும்பி வந்துள்ளார். எனவே விசா காலம் முடிந்தும் தற்போது வரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பது தெரியவந்தது.
தற்போது, தாய் மற்றும் குழந்தைகள் கர்வாரில் உள்ள பெண்கள் மையத்தில் வைக்கப்பட்டுன்னர். அவர்களை ரஷியாவுக்கு திருப்பி அனுப்ப நடவ்டிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.