null
ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட வேண்டும்.. சர்தார் படேலின் கடிதத்தை குறிப்பிட்டு கார்கே சொன்ன விஷயம்
- பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் சொன்ன கருத்துக்களை உண்மையிலேயே மதித்தால், ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும்.
- காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு அவரது முயற்சிகளைத் தடுத்தார் என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக இன்று கொண்டாடப்பட்டுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் அவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, சர்தார் வல்லபாய் படேல், இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி ஆகிய இருவரும்தான் நாட்டின் ஒற்றுமைக்காக மிகக் கடுமையாக உழைத்தார்கள்.
அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் மரியாதை கொடுத்திருக்கிறது. பாஜகவும் அதன் தலைவர்களும் நேருவுக்கும் படேலுக்கும் இடையில் மோதல் நிலவியதுபோன்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக நல்ல உறவில் இருந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் சொன்ன கருத்துக்களை உண்மையிலேயே மதித்தால், ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும்.
இன்று நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இதற்குபாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸுமே காரணமாக இருக்கின்றன. நாட்டில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் இவர்களே மூல காரணமாக உள்ளனர்
சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்ஸை ஏன் தடை செய்தார் என்பதற்கான காரணங்களை அவர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
சர்தார் படேல், ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் காந்தியின் மரணத்தைக் கொண்டாடி, இனிப்புகளை விநியோகித்தனர்' என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் பேச்சுகள் விஷம் நிறைந்தவை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு அவரது முயற்சிகளைத் தடுத்தார் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் இதற்கு பதிலடியாக கார்கே பேசியுள்ளார்.
1948 மகாத்மா காந்தி படுகொலைக்கு பின் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு பின்பு 1949 இல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது