நிதிஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை: ராகுல் காந்தி தாக்கு
- பீகாரின் புர்னியா பகுதியில் நடந்த இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ராகுல் காந்தி பேசினார்.
- அப்போது, மகாகத்பந்தன் கூட்டணி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் என்றார்.
பாட்னா:
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் என்ற கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் முதல்மந்திரியாகவும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல் மந்திரியாகவும் செயல்பட்டு வந்தனர்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டார். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாநில கூட்டணியில் உள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் முரண்பாடு ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். இதனால் மகாகத்பந்தன் கூட்டணி அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு பா.ஜ.க. ஆதரவளித்த நிலையில், பா.ஜ.க. ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் பீகாரின் முதல் மந்திரியாக 9-வது முறை மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், நிதிஷ்குமார் இல்லாமல் மகாகத்பந்தன் கூட்டணி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
பீகாரின் புர்னியா பகுதியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின்போது ராகுல் காந்தி பேசியதாவது:
பீகார் மாநிலத்தில் சமூக நீதிக்காக மகாகத்பந்தன் கூட்டணி தொடர்ந்து போராடும். எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை.
தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாட்டின் அனைத்து துறைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
தலித்துகள், ஓ.பி.சி. மற்றும் பிற பிரிவினரின் சரியான மக்கள் தொகையைக் கண்டறிய நம் நாட்டில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை.
மணிப்பூரில் உள்நாட்டுப் போருக்கான சூழல் நிலவி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இன்னும் அங்கு செல்லவில்லை என தெரிவித்தார்.