ராணுவம் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
- ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு ஜாமின் வழங்கியது.
லக்னோ:
இந்தியா-சீனா இடையே மோதல் நிலவிவந்த காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி சூழ்நிலையை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார்.
இந்திய ஆயுதப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உதய்சங்கர் ஸ்ரீ வஸ்தவா என்பவர் லக்னோ கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சம்மனை ரத்துசெய்ய ஐகோர்ட மறுத்துவிட்டது.
இந்நிலையில், லக்னோ கோர்ட்டில் இன்று ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்ற கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.