முதல்வர் மாற்றம் விவகாரம்: மேலிடம் தெளிவான சிக்னல் கொடுத்துவிட்டதாக சித்தராமையா மகன் தகவல்
- சித்தராமையா தலைமைத்துவம் மாற்றப்படலாம் என கர்நாடக காங்கிரசில் பேசப்பட்டு வருகிறது.
- ஆனால் காங்கிரஸ் உயர் தலைமை இதுவரை வெளிப்படையாக ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.
முதலமைச்சர் மாற்றம் குறித்த விவகாரத்தில், மாற்றத்திற்கான கோரிக்கைகளை உயர் தலைமை ஏற்கவில்லை. மாற்றம் கிடையாது என தெளிவான சிக்னல் கொடுத்துவிட்டதாக, சித்தராமையா மகனும், கர்நாடக மாநில மேலவை எம்.எல்.ஏ-வுமான யதீந்திரா சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா மகன் யதீந்திரா கூறியதாவது:-
என்னை பொறுத்தவரையில், உயர் தலைமை இது தொடர்பாக வெளிப்படையாக சொல்லியிருக்காது. ஆனால், எந்தவொரு தலைமைத்துவம் மாற்றமும் இருக்காது என தெளிவான சிக்னல் கொடுத்துள்ளது. ஆகவே, சித்தராமையா ஐந்து வருடம் முதல்வராக பணியாற்றுவார் என நம்புகிறேன். இது தீர்க்கப்பட்ட விசயம். இப்போது அப்படித்தான் தெரிகிறது. சித்தராமையாவை நீக்க வேண்டும் என்றோ அல்லது நீக்கப்படுவார் என்றோ யாரும் கூறவில்லை.
இவ்வாறு யதீந்திரா சித்தராமையா தெரிவித்தார்.
முன்னதாக,
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.