பீகார் தேர்தல் முடிவை எதிர்த்த பிரசாந்த் கிஷோர் கட்சி மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
- ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையின் பேரில், ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் நாங்கள் ஒரு பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது.
- இந்த விவகாரம் ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது என்பதால், பாட்னா ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பாட்னா:
பீகாரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஜே.டி.யூ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இத்தேர்தலில் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன சுராஜ் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஜன சுராஜ் கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்-அமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பெண் பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பீகார் அரசாங்கத்தின் முடிவு நடத்தை விதிகளை மீறியது என்றும், வாக்காளர்களைப் பாதிக்கும் வகையில் ஒரு நலத்திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பீகாரில் புதிய தேர்தல்களை நடத்தக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜன சுராஜ் கட்சியின் மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது என்பதால், பாட்னா ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையின் பேரில், ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் நாங்கள் ஒரு பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. உங்கள் கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன? மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள், நீங்கள் விளம்பரம் தேடுவதற்காக இந்த நீதித்துறை மேடையைப் பயன்படுத்துகிறீர்களா? என்றார்.