இந்தியா

(கோப்பு படம்)

மக்கள் மீது வரியை உயர்த்து...நண்பர்களுக்கு வரியை குறை...மோடி அரசை விமர்சித்த ராகுல்

Published On 2022-08-21 22:30 GMT   |   Update On 2022-08-22 01:12 GMT
  • மத்திய அரசின் வரி வருவாய் குறித்த பட்டியலை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.
  • பொதுமக்களிடம் வசூலித்த வரி வருவாய் அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை விட, பொதுமக்கள் மீது அதிக வரியை விதிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதை விட மக்களிடம் இருந்து மத்திய அரசு அதிக வரி வருவாய் பெறுவதை விளக்கும் பட்டியலை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அதில் கடந்த 2010 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் கிடைத்த வரி வருவாய் 40 சதவீதமாக உள்ளதாகவும் அதுவே பொதுமக்களிடமிருந்து பெற்ற வரி வருவாய் 24 சதவீதமாக உள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

கடந்த 2021 ஆண்டு கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து தற்போதைய மத்திய அரசு பெற்ற வரி வருவாய் 24 சதவீதமாக குறைந்திருப்பதும், அதே நேரத்தில் பொதுமக்களிடமிருந்து வசூலித்த வரி வருவாய் 48 சதவீதமாக அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் மீது வரியை உயர்த்து, நண்பர்களுக்கு வரியை குறை, இதுதான் சூட்-பூட்-சர்க்காரின் செயல்பாடு என்று ராகுல்காந்தி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இதனிடையே, அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய நிதி மந்திரிக்கு எழுதியிருந்த கடிதத்தை தமது டுவிட்டர் பதிவில் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News