பஞ்சாப் வெள்ள சேதம் ரூ.20,000 கோடி, அறிவித்த நிதியுதவி ரூ.1,600 கோடி.. நியாயமா? - மோடிக்கு ராகுல் கடிதம்
- 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.
- ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார்.
வெள்ளத்தால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாபிற்கு மத்திய அரசு அறிவித்த ரூ.1,600 கோடி நிதி உதவி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
மத்திய அரசு அறிவித்த சொற்ப உதவி பஞ்சாப் மக்களுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில், மழைப் பொழிவால் பஞ்சாப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.
வெள்ளத்தால் லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, நிலங்களை பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் மழையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவிப்பது நியாயமற்றது. முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குருதாஸ்பூர் விவசாயிகளிடம் பேசினார்.
இதற்கிடையில், சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர், அங்குள்ள நிலைமையை வான்வழியாக ஆய்வு செய்தார். இந்த மாதம் 9 ஆம் தேதி, பஞ்சாபிற்கு ரூ.1,600 கோடி நிதி உதவியை அறிவித்தார். இந்த சூழலில், ராகுல் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.