இந்தியா

3 மணி நேரத்தில் 50 கிமீ பயணம்... குஜராத்தில் பிரதமர் மோடியின் மெகா ரோட்ஷோ

Update: 2022-12-01 12:33 GMT
  • அகமதாபாத்தில் இருந்து தொடங்கிய பிரசார பேரணி காந்திநகர் தெற்கு தொகுதியில் நிறைவடைகிறது.
  • குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் பாஜக களப்பணியாற்றி வருகிறது.

அகமதாபாத்:

குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகன பிரசாரத்தை இன்று தொடங்கினார். வாகன பிரசாரத்தில் அவருடன் ஏராளமான நிர்வாகிகள் அணிவகுத்து செல்கின்றனர். மொத்தம் 16 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அகமதாபாத்தின் நரோதா காமில் இருந்து தொடங்கிய பிரசார பேரணி காந்திநகர் தெற்கு தொகுதியில் நிறைவடைகிறது. 3 மணி நேரத்தில் 50 கிமீ தூரம் சென்று பிரசாரம் செய்கிறார் மோடி. இந்த பிரசாரத்தின்போது வழியில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் நினைவிடங்களில் சிறிது நேரம் வாகனம் நிறுத்தப்பட்டு, பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 சட்டமன்றத் தேர்தலில் 99 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறது. இந்த முறை, 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், 140 இடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தில் உள்ளது.

டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

Tags:    

Similar News