வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய பிரதமர் மோடி: இதுதான் காரணம்
- கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
- அப்போது பேசிய அவர், பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார் என்றார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நான் ஐ.பி.எல். தொடர் பார்த்தேன். பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார். இந்த இளம் வயதில் அவர் பெரிய சாதனையை படைத்துள்ளார்.
இந்த சாதனையின் பின்னணியில் அவரது கடின உழைப்பு உள்ளது. அவர் தனது திறமையை வெளிக்கொண்டு வர பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.
நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பிரகாசிப்பீர்கள். முடிந்தவரை விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எப்போதும் விளையாட்டுத் துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
புதிய கல்வி கொள்கையான தேசிய கல்வி கொள்கையில் விளையாட்டை கல்வியின் ஒரு பகுதியாக மாற்றி உள்ளோம். நாட்டில் நல்ல வீரர்களுடன் சிறந்த விளையாட்டு நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என தெரிவித்தார்.
பீகாரின் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.