இந்தியா

திருப்பதி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

Published On 2023-11-27 09:10 IST   |   Update On 2023-11-27 12:28:00 IST
  • விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றார்.
  • பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு 4-வது முறையாக திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் நேற்று இரவு 7.50 மணிக்கு ரேணிகுண்டா வந்தடைந்தார்.

விமான நிலையம் வந்த அவருக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றார்.

சாலை மார்க்கமாக திருப்பதி மலைக்கு வந்த பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்றனர். நேற்று இரவு திருமலையில் உள்ள ரச்சனா சிறப்பு விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார்.

இன்று காலை 8 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். நெற்றியில் பெரிய நாமமிட்டு பிரதமர் மோடி கோவிலுக்கு வந்திருந்தார்.

சுமார் 45 நிமிடங்கள் கோவிலில் இருந்தார். பிரதமர் மோடிக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்டோர் ஏழுமலையான் படம் மற்றும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். 

தரிசனம் முடிந்து 9.30 மணிக்கு வெளியே வந்தார். அவரை பார்த்து பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் ஹக்கீம் பேட்டை விமான நிலையத்திற்கு சென்றார்.

திருப்பதி கோவிலில் வழிபாடு செய்த புகைப்படங்களை பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காக திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News