பிரதமர் மோடியால் மழைக்கால கூட்டத் தொடரில் இருந்து ஓடி விட முடியாது: ஜெய்ராம் ரமேஷ்
- பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட நாங்கள் வற்புறுத்தினோம்.
- 16 அரசியல் கட்சிகள் கடிதம் எழுதின.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூரின்போது ரபேல் உள்பட இந்தியாவின் 6 விமானங்களை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறியது.
ஆனால் இந்தியா இழப்புகளை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தியது.
ஆனால் மத்திய அரசு சிறப்புக் கூட்டத்தை கூட்டவில்லை. இதற்கிடையே இந்திய ராணுவ தலைமைத் தளபதி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது விமானங்களை இழந்ததை ஒப்புக்கொண்டார். ஆனால், பாகிஸ்தான கூறிய எண்ணிக்கையை மறுத்தார்.
இதனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா இழந்தது எவ்வளவு? என எதிர்க்கட்சிகள் தொடரந்து கேள்விகள் எழுப்பி வருகின்றன.
இதற்கிடையே பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தில் இருந்து ஓட முடியும். ஆனால் மழைக்கால கூட்டத் தொடரில் இருந்த ஓட முடியாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட நாங்கள் வற்புறுத்தினோம். நேற்று, 16 அரசியல் கட்சிகள் கடிதம் எழுதின. சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை கூட்டுவதில் இருந்து திசைதிருப்பும் வகையில், மழைக்கால கூட்டத்தொடரை திடீரென மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் சிறப்பு கூட்டத்தொடரில் இருந்து ஓட முடியும், ஆனால் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து ஓடிவிட முடியாது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.