ரூ.1.8 கோடி காப்பீட்டு பணத்திற்காக மாமனாரை இரும்புக் கம்பியால் தீர்த்துக் கட்டிய மருமகன்
- இந்த விபத்து வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
- இந்தக் கொலைக்கு உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் கைது செய்தனர்.
ஆந்திராவின் அனகப்பள்ளி மாவட்டம் கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு நாராயணமூர்த்தி (54)
இவர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி சாலையில் சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நாராயணமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை விபத்தில் அவர் மரணம் அடைந்து விட்டதாக நாராயண மூர்த்தியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாராயணமூர்த்தியின் உடல் மீது இருந்த காயங்கள் கொலைக்கான சாத்தியக்கூறுகளுடன் இருப்பதால் இந்த விபத்து வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, ஆறு மாதங்களுக்கு முன்பு நாராயணமூர்த்தியின் பெயரில் பல்வேறு எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து ரூ.1.08 கோடி மதிப்புள்ள காப்பீட்டுக் பாலிசிகள் பெறப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
நாராயண மூர்த்தி இறந்தால் காப்பீட்டுத் தொகை தங்களுக்கு வந்துவிடும் என்ற பேராசையில் மருமகன் சுன்கரி மற்றும் பேரன் சுன்கரி ஜோதி பிரசாத் ஆகியோர் அவரை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொன்றதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அவர்களை கைது செய்த போலீசார் இந்தக் கொலைக்கு உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் கைது செய்தனர்.