ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறிய போர்.. இந்திய விமானங்களுக்கு என்னாச்சு? - காங்கிரஸ் கேள்வியால் கொதித்த பாஜக
- நாட்டையும் ஆயுதப்படைகளின் துணிச்சலையும் ஏமாற்றுகின்றன
- பாகிஸ்தான் வலியால் அழுகிறது. நீங்கள் ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறிய போர் என்று சொல்கிறீர்கள்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆபரேஷன் சிந்தூரை சிறிய போர் எனக் குறிப்பிட்டது பாஜகவை வெகுண்டெழ செய்துள்ளது. அதேபோல் ராணுவ நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை விமானங்கள் இழப்பு குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி பாஜவுக்கு புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவர் சம்பித் பத்ரா, இரண்டு காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள் "நாட்டையும் ஆயுதப்படைகளின் துணிச்சலையும் ஏமாற்றுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ராகுல் காந்தியை ஏன் விரும்புகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
"காங்கிரஸ் கட்சியினரே, கார்கே ஜி, ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறிய போர் என்று கூறுகிறார்கள். நமது ஆயுதப்படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்குள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களைத் தாக்கி, 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை ராகுல் காந்தியும் கார்கே ஜியும் புரிந்து கொள்ளவில்லையா? பாகிஸ்தானின் பதிலடிக்குப் பிறகு, அவர்களின் 11 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன, இன்று, பாகிஸ்தான் வலியால் அழுகிறது. நீங்கள் ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறிய போர் என்று சொல்கிறீர்கள்," என்று சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார்.
"ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களாக ஆதாரம் கேட்டு வருகிறார். முதல் நாளிலிருந்தே நாங்கள் டிஜிட்டல் ஆதாரங்களை வழங்கி வருகிறோம். பாகிஸ்தானியர்களே ஆதாரங்களைக் காட்டியுள்ளனர். இதுபோன்ற போதிலும், நீங்கள் ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கு ஆதாரம் கேட்கிறீர்கள்" என்று அவர் மேலும் ஆதங்கப்பட்டார்.