பீகாரில் ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் சுட்டுக்கொலை!
- பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர்.
- 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர்.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ரூ. 50,000 வெகுமதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் தடைசெய்யப்பட்ட சிபிஐ-மாவோயிஸ்ட் (CPI-Maoist) அமைப்பின் வட-பீகார் மத்திய மண்டலக் குழுவின் செயலாளர் தயானந்த் மலக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.
"14-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மலக்கர் என்ற சோட்டு என்ற நக்சலைட், பெகுசராய் மாவட்டத்தின் தேக்ரா பகுதியில் புதன்கிழமை மாலை சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவுடன் நடந்த மோதலில் (Encounter) உயிரிழந்தார்.
பாதுகாப்பு படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மலக்கர் தனது கூட்டாளிகளுடன் ஒளிந்திருந்த இடத்திற்கு சென்றனர். காவல்துறையினரைக் கண்டதும், மலக்கர் அங்கிருந்து தப்பிக்க முயன்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் அந்த நக்சலைட் காயமடைந்தார் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மலக்கர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என பீகார் காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திலிருந்து ஒரு 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர். முன்னதாக வட பீகாரில் பல்வேறு நக்சலைட் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மலக்கரை பற்றி தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.