பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.65 கோடி- கடந்த ஆண்டைவிட ரூ.68,455 அதிகம்
- சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.
- நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ்குமார் 10-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு வெறும் ரூ.1.65 கோடிதான் என்று தெரிய வந்துள்ளது.
நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சர்களின் சொத்து விவரங்கள் மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடைசி நாளில் இந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நிதிஷ்குமாரின் சொத்து விவரம் ரூ.1.65 கோடி என்று தெரியவந்து உள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.68,455 அதிகமாகும்.
நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன. அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.17.66 லட்சமாகும். அதே சமயம் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1.48 கோடியாகும். மேலும் அவருக்கு டெல்லியில் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் ஒரு பிளாட்டும் இருக்கிறது.
துணை முதலமைச்சர் சவுத்ரியிடம் ரொக்கமாக ரூ.1.35 லட்சம் உள்ளது. அவரது மனைவி குமாரி மம்தாவிடம் ரூ.35 ஆயிரம் இருக்கிறது. சவுத்ரியிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஒரு துப்பாக்கியும், விவசாயம் அல்லாத நிலம் உள்பட ரூ.4.91 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன.
மற்றொரு துணை முதலமைச்சரான விஜய்குமார் சின்காவிடம் ரூ.48.46 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், ரூ.77,181 மதிப்புள்ள ஒரு கைத் துப்பாக்கியும் உள்ளது.