ஆபரேஷன் சிந்தூர்: பஹவல்பூரை இந்திய ராணுவம் குறி வைத்தது ஏன்?.. யார் இந்த மசூத் அசார்?
- ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான அசார், 2001 நாடாளுமன்றத் தாக்குதல் முதல் 2019 புல்வாமா குண்டுவெடிப்பு வரை பல வழக்குகளில் தேடப்பட்டவர்.
- காந்தஹாரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட பின்னர் இந்திய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட 3 பயங்கரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர்.
இந்தியாவின் மிகவும் தேடப்படும் பாகிஸ்தானிய பயங்கரவாதி மசூத் அசாரின் கோட்டையாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் கருதப்படுகிறது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான அசார், 2001 நாடாளுமன்றத் தாக்குதல் முதல் 2019 புல்வாமா குண்டுவெடிப்பு வரை பல வழக்குகளில் நமது அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பஹவல்பூரில் மசூத்துக்கு 2 வீடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்று உஸ்மான்-ஓ-அலி மசூதிக்கு அருகில் அமைந்துள்ளது.
மசூதின் 2-வது வீடும் முதல் வீட்டிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஜாமியா மசூதி என்ற மசூதிக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
மேலும், பஹவல்பூரில் பயங்கரவாத அமைப்புக்கு 4 பயிற்சி மையங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹவல்பூரில் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மற்றும் விமானப்படை தளம் உள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் உள்ளது.
1999-ம் ஆண்டு காந்தஹாரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட பின்னர் இந்திய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட 3 பயங்கரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர். அவர் பாகிஸ்தானுக்குச் சென்று ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பைத் தொடங்கினார்.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கு, பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் 2019-ம் ஆண்டு தெற்கு காஷ்மீரில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றிலும் மசூத் அசார் மிகவும் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இதனால் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பஹவல்பூரை குறி வைத்து தாக்கியுள்ளது.