இந்தியா

நூ வன்முறை: ஓடஓட விரட்டி பஜ்ரங் தள தலைவரை கைது செய்த போலீசார்- வீடியோ

Published On 2023-08-16 07:09 GMT   |   Update On 2023-08-16 07:09 GMT
  • நூ மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு
  • வெறுப்பு பேச்சு காரணமாக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தியதால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் அருகில் உள்ள மாநிலங்களிலும் பரவும் அபாயம் ஏற்பட்டது. ஆனால், போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.

நூ மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக இணைய சேவை முடக்கப்பட்டது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து சேவை முடங்கியது. தற்போது அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டன.

வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

நூ மாவட்ட கலவரம் தொடர்பாக பஜ்ரங் தள தலைவர் ராஜ்குமார் என்ற பிட்டு பஜ்ரங்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொது ஊழியர்களை கடமை செய்வதில் இருந்து தடுப்பது மற்றும் தாக்குவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு அமைப்பு அவரை தேடிவந்தனர். இந்த நிலையில், இன்று காலை பரிதாபாத்தில் உள்ள தபுவா என்ற இடத்தில் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து அப்போது வீட்டில் பதுங்கியிருந்த பிட்டு பஜ்ரங்கி தப்பித்து ஓட முயற்சி செய்தார்.

அதிகாரிகள் அவரை துரத்திச் சென்று பிடித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. சுமார் 20 அதிகாரிகளில் பலர் கையில் லத்தியுடன் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

வெறுப்பு பேச்சு தொடர்பாக பஜ்ரங்கி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ''பிட்டு பஜ்ரங்கி தனது வீடியோவில் மத வெறியை தூண்டும் வகையில் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக தனது சக அமைப்புகளை தூண்டிவிட்டு வருகிறார்'' என ஒரு வழக்குப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News