null
மீண்டும் நோட்புக் கொண்டாட்டம்: திக்வேஷ் ரதிக்கு அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் 'பிளே ஆப்' சுற்று கனவை ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா தகர்த்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்தில் 59 ரன் (4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஐதராபாத் அணியை வெற்றி பெற வைத்தார்.
நேற்றைய போட்டியில் லக்னோ நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை ஐதராபாத் எளிதில் எடுத்தது. ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறிய ஐதராபாத் இந்த வெற்றி மூலம் லக்னோவையும் தன்னுடன் இழுத்து சென்றது.
அதிரடியாக விளையா டிய அபிஷேக் சர்மா விக்கெட்டை திக்வேஷ் ரதி கைப்பற்றினார். அப்போது அவர் தனது வழக்கமான 'நோட்புக்' கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரிடம் அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட் டார். இருவருக்கும் இடையேயான இந்த மோதலால் ஆடுகளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள்.
நோட்புக் கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் 2 முறை விதிகளை மீறியுள்ளார். இதற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
மீண்டும் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதம் செய்ததற்காகவும் திக்வேஷ் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக குஜராத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது. தடையோடு திக்வேசுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஒரு போட்டியில் இருந்து பெறும் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.