இந்தியா

இங்கே யாராவது இறந்தார்களா?.. சொகுசு காரை அப்பாவி மக்கள் மீது மோதி அலட்சியமாக பேசிய நபருக்கு ஜாமின்

Published On 2025-04-01 07:06 IST   |   Update On 2025-04-01 07:06:00 IST
  • விபத்து ஏற்படுத்திய லம்போர்கினி கார் பறிமுதல்
  • கார் மோதியதில் காயமபட்ட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரில் வந்த நபர் 2 பேரை மோதிவிட்டு, "இங்கு யாராவது இறந்தார்களா என்ன? என்று அலட்சியமாக கேட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு, காரை ஓட்டிய தீபக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைதான தீபக்கிற்கு சூரஜ்பூரில் உள்ள நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

நொய்டாவின் செக்டார் 94 இல், கட்டுமானத்தில் உள்ள ஒரு வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் ஒரு சிவப்பு லாம்போர்கினி கார் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின் மரத்தில் மோதி கார் நின்றது.

விபத்துக்கு பின்பு எடுக்கப்பட்ட வீடியோவில், "விபத்துக்குள்ளான சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரை நோக்கி கட்டுமான தொழிலாளர்கள் ஓடுகின்றனர். காரை ஓட்டிய நபரிடம் அந்த தொழிலார்கள்களில் ஒருவர், "இந்த விபத்தில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்க, அதற்கு காரை ஓட்டியவர், 'இங்கே யாராவது இறந்தார்களா?' என்று அலட்சியமாக பதில் கூறினார்.

கார் மோதியதில் காயமடைந்த 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News