இந்தியா

மாநிலங்களவை தலைவர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்க முடியாது: தன்கர் கருத்துக்கு கபில் சிபல் பதில்

Published On 2025-04-18 17:26 IST   |   Update On 2025-04-18 17:26:00 IST
  • சட்டம் இயற்றும், நிர்வாக நடைமுறையை செயல்படுத்தும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் இருக்கிறார்கள்.
  • அரசியல் சட்டப்பிரிவு 142, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஒரு அணு ஏவுகணையாக மாறி இருக்கிறது.

கவர்னர் அனுப்பும் மசோதா குறித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருந்தது.

மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் இது தொடர்பாக பேசும்போது, நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியதுடன், ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாநிலங்களவை தலைவர் இதுபோன்று அரசியல் கருத்துகள் கூறியதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை என மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக கபில் சிபல் கூறியதாவது:-

மக்களவை சபாநாயகர் பதவி குறித்து அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு கட்சிக்கான அவைத் தலைவராக இருக்க முடியாது. அவர் வாக்களிப்பதில்லை. வாக்கெடுப்பின்போது இருபக்கமும் சமமான நிலை ஏற்பட்டால் மட்டுமே வாக்களிக்க முடியும். இதே நடைமுறைதான் மாநிலங்களவையிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் சமநிலையாக இருக்க வேண்டாம்.

நீங்கள் சொல்லும் அனைத்தும் இருதரப்பிற்கும் இடையில் சமநிலையில் இருக்க வேண்டும். சபாநாயகர் ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்க முடியாது. அவர் (தன்கர்) என்று நான் கூறவில்லை, ஆனால் கொள்கையளவில் எந்த சபாநாயகரும் எந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்க முடியாது. ஒருவேளை அப்படி இருந்தால் அந்த பதவிக்கான கண்ணியம் குறைந்துவிடும்.

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அவற்றுக்கு அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

அத்துடன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், கவர்னரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயித்தனர்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மசோதாக்களை கிடப்பில் போடும் கவர்னர்களுக்கு கடிவாளம் போடும் வகையிலான இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

அதைப்போல ஜனாதிபதிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்களை வழங்கியது அரிதான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

ஆனால் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியதை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கடுமையாக சாடியிருந்தார்.

நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ஜக்தீப் தன்கர் கூறியதாவது:-

சட்டம் இயற்றும், நிர்வாக நடைமுறையை செயல்படுத்தும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் இருக்கிறார்கள். நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது என்பதால் அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை.

அரசியல் சட்டப்பிரிவு 142, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஒரு அணு ஏவுகணையாக மாறி இருக்கிறது. அது நீதித்துறையிடம் எப்போதும் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்பில் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது?

இதில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா?, இல்லையா? என்பதற்கான கேள்வி அல்ல. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க ஜனாதிபதி அறிவுறுத்தப்படுகிறார். இல்லையென்றால் அது சட்டமாகிறது. என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு தருணத்தை பார்ப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை.

இந்திய ஜனாதிபதி, மிகவும் உயர்ந்த ஒரு பதவி. அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், பராமரிப்பதாகவும் கூறி அவர் பதவியேற்கிறார். துணை ஜனாதிபதி, மந்திரிகள் உள்ளிட்ட நாடாளுமன்றவாதிகள் மற்றும் நீதிபதிகள், அந்த அரசியல் சாசனத்துக்கு அடிபணிவதாக உறுதியேற்று பதவி ஏற்கிறார்கள்.

எந்த அடிப்படையிலும் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தும் நிலை இருக்கக்கூடாது. அரசியலமைப்பின் கீழ் உங்களுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3)-ன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. அதுவும் 5 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அதில் இருக்க வேண்டும்.

செயல்முறையில் பொறுப்புக்கூறல் கொள்கை உள்ளது. நாடாளுமன்றத்தில் நீங்கள் கேள்விகள் கேட்கலாம். ஆனால் நீதித்துறையால் நிர்வாகம் நடத்தப்படுமானால், நீங்கள் எப்படி கேள்விகள் கேட்பீர்கள்? தேர்தல்களில் யாரை நீங்கள் பொறுப்பேற்க வைப்பீர்கள்?

நமது மூன்று நிறுவனங்களான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்பு மலர வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒன்று மற்றொன்றின் களத்தில் ஊடுருவினால் அது ஒரு சவாலை ஏற்படுத்தும். அது நல்லதல்ல.

இவ்வாறு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆவேசமாக பேசினார்.

Tags:    

Similar News