இந்தியா

சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் உலகில் இல்லை: மந்திரி கிரண் ரிஜிஜு

Published On 2025-04-03 01:39 IST   |   Update On 2025-04-03 01:39:00 IST
  • இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என சிலர் கூறினர்.
  • ஆனால் இந்தக் கூற்று முற்றிலும் தவறானது என தெரிவித்தார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், பாராளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு விவாதத்துக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் உலகில் இல்லை. பெரும்பான்மையினர் முற்றிலும் மதச்சார்பற்றவர்கள் என்பதால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

பார்சிகள் போன்ற சிறிய சிறுபான்மை சமூகங்கள் கூட இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளன. இங்குள்ள அனைத்து சிறுபான்மையினரும் பெருமையுடன் வாழ்கிறார்கள்.

இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என சில உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இந்தக் கூற்று முற்றிலும் தவறானது.

சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. நானும் ஒரு சிறுபான்மையினர், நாம் அனைவரும் இங்கு எந்த பயமும் இல்லாமல் பெருமையுடன் வாழ்கிறோம்.

வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினர் அந்தந்த நாடுகளில் மத துன்புறுத்தலை எதிர்கொண்ட பிறகு இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். இதைச் சொல்வது மிக, மிக தவறு.

வரும் தலைமுறை உங்களை ஒருபோதும் மன்னிக்காது. நாட்டின் பெரும்பான்மையினர் முழுமையாக மதச்சார்பற்றவர்கள் என்பதால் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இது இல்லை. ஆனாலும், நீங்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினரையும் ஒன்றிணைக்கப் போகிறது. வக்பு தீர்ப்பாயங்களில் ஏராளமான தகராறுகள் நிலுவையில் உள்ளன. சட்டத்தின் மூலம் இந்த வழக்குகளை விரைவுபடுத்த அரசாங்கம் விரும்புகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News