இந்தியா

பாராளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளோம் - முதல் மந்திரி நிதிஷ்குமார்

Published On 2023-06-23 13:58 GMT   |   Update On 2023-06-23 13:58 GMT
  • நிதிஷ்குமார் நாடு முழுவதும் பயணித்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
  • எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெறும்,

பாட்னா:

பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் மற்றொரு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து செயல்படாமல் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளுடன் கை கோர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா பேசுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்க விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாட்டை விமர்சித்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் பேசுகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நாங்கள் இருவரும் 25 ஆண்டுகளாக கடுமையான எதிரிகளாக இருந்து சண்டை போட்டவர்கள். இப்போது இணைந்து செயல்படவில்லையா? அதேபோலதான் நாம் அனைவரும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News