பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த யூடியூபர் ஜோதி- பஹல்காம் சென்று வந்தது கண்டுபிடிப்பு
- சீன உளவு அமைப்புடன் தொடர்பு இருந்த விவரம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
- சீனாவில் இருந்த போது அவர் யார்-யாரை சந்தித்தார்? எங்கெல்லாம் சென்றார் என்ற விவரங்கள் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவை சேர்ந்த சிலர் உளவாளிகளாக செயல்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பணத்துக்கு ஆசைப்பட்டு சொந்த நாட்டையே காட்டி கொடுத்ததாக அரியானாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதான ஜோதி மல்ஹோத்ரா பற்றி தான் தினந்தோறும் புது புது தகவல்கள் வெளியாகி வருகிறது. 5 நாட்கள் போலீஸ் காவலில் உள்ள அவரிடம் அரியானா போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கூட்டாக விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்தது தொடர்பான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிராவல் வித் ஜோ என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் ஜோதி பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானில் உள்ள புனித தலங்களான நங்கனா, சாஹிப், கர்தார்பூர், பங்ஞாசாஹிப் மற்றும் லாகூரில் உள்ள குருத்வாரா ,தேரா சாஹிப் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது வழக்கம்.
அதே போல தான் ஜோதி மல்ஹோத்ராவும் சீக்கியர்களின் புனித திருவிழாவாக கருதப்படும் பைசாகி விழாவுக்கு செய்தி சேகரிக்கும் போர்வையில் கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். இதற்காக அவர் இந்தியாவில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட ஆன்மீக பயண ஒருங்கிணைப்பாளர் ஹர்கிராத் சிங் என்பரை அணுகினார். அவரது மூலம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிய எஷான் என்கிற டேனிஷ் என்பவருடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவரது ஏற்பாட்டில் தான் அவர் பாகிஸ்தான் சென்றார். அங்கு ஜோதியை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு டேனிஷ் அறிமுகப்படுத்தி வைத்தார். இதற்கு பிறகு தான் ஜோதி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பாகிஸ்தான் உளவாளியாக மாறினார். தொடர்ந்து அவர் ஐ.எஸ்,ஐ.யுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
2024-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி ஜோதி மீண்டும் பைசாகி திருவிழாவுக்காக பாகிஸ்தான் சென்றார். அவர் அங்கு 20 நாட்கள் வரை தங்கினார்.
இந்த சமயத்தில் அவர் பாகிஸ்தான் விருந்தோம்பல், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரத்தை பாராட்டும் விதமாக வீடியோக்களும் வெளியிட்டார். பின்னர் அவர் இந்தியா திரும்பி வந்தார். ஒரு மாதம் கழித்து அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
மேலும் அவர் நேபாளம், வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வந்தார். அவர் சீனாவுக்கு எதற்கு சென்றார் என்பது தான் அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு சீன உளவு அமைப்புடன் தொடர்பு இருந்த விவரம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சீனாவில் இருந்த போது அவர் யார்-யாரை சந்தித்தார்? எங்கெல்லாம் சென்றார் என்ற விவரங்கள் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மேலும் 6 அதிகாரிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்பான முக்கியமான தகவல்கள், இந்திய ராணுவத்தின் நகர்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டதாகவும், அவர்களுக்கு உளவு பார்த்த விவரமும் தெரிய வந்து உள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்து உள்ளார். அவர்கள் தொடர்பான விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இதைத்தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லை வரை அவர் சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் கண்டிப்பாக அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து இருக்கலாம், அந்த அமைப்பிற்கு பணத்துக்காக ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஜோதி மல்ஹோத்ரா தடம் மாறி சென்றதற்கு நவீன தொழில்நுட்பம் பெரிதும் உதவி செய்துள்ளது.
இதையடுத்து அவரது செல்போன்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது வங்கி கணக்குகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவருக்கு யார் யார் பணம் அனுப்பி உள்ளனர் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முன்பாக ஜோதி பலமுறை ஜம்மு-காஷ்மீர் சென்று உள்ளார். பஹல்காம் பகுதிக்கு அவர் சமீபத்தில் சென்று உள்ளார். குல்மார்க், தால் ஏரி, மற்றும் லடாக்கில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு பகுதிகளிலும் அவர் சுற்றி திரிந்துள்ளார்.
இது தொடர்பான சுற்றுலா வீடியோக்களையும் அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு உள்ளார். ஜோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பஹல்காம் பகுதிக்கு சென்று வந்ததும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாகவும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கைதான 2 நாட்களுக்கு பிறகு ஜோதி மல்ஹோத்ராவின் இன்ஸ்டாகிராம் கணக்கை அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜோதி மல்ஹோத்ராவை யூடியூப்பில் 4 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேரும் பின் தொடர்ந்து வந்தனர். அவர் கைதான பிறகு 48 மணி நேரத்தில் அவரை பற்றிய விவரங்களை அறிய 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கூகுளில் தேடியதும் தெரியவந்துள்ளது.