வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்கு புதிய விதிகள்: 2 ஹெல்மெட்கள், ABS கட்டாயம் - மத்திய அரசு முடிவு!
- ஹெல்மெட்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தரநிலைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும்.
- ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்வதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதிய வாகனங்களை விற்கும் போது இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இல் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களின் இந்த புதிய விதி சேர்க்கப்பட உள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த விதி நடைமுறைக்கு வரும். ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிக்கும் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது இதன் நோக்கம்.
வழங்கப்படும் ஹெல்மெட்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தரநிலைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும். இருப்பினும், மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129 இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.
ஹெல்மெட் விதியுடன் கூடுதலாக, ஜனவரி 1, 2026 முதல், 50 சிசி-க்கு மேல் எஞ்சின் திறன் அல்லது 50 கி.மீ/மணிக்கு மேல் அதிகபட்ச வேகம் கொண்ட மோட்டார் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் உட்பட அனைத்து புதிய L2 வகை இருசக்கர வாகனங்களுக்கும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்வதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ABS திடீர் பிரேக்கிங்கின் போது வாகனத்தின் கட்டுப்பாட்டை மேம்படுத்தி சறுக்குவதைத் தடுக்கும்.
இந்த முன்மொழியப்பட்ட விதிகள் குறித்து தற்போது பொதுமக்கள் கருத்துக்கள் வரவேரிக்கப்டுகின்றன. பொதுமக்கள் கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.