இந்தியா

தலைவர்கள் வேறு... ஆனால் பூங்கொத்து ஒன்றுதான்... NDA நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்

Published On 2024-06-08 07:34 IST   |   Update On 2024-06-08 07:34:00 IST
  • பிரதமர் மோடிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.
  • அரசியலமைப்பு சட்ட புத்தகம் மீது தலைவைத்து மோடி வணங்கினார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்தியில் புதிய அரசு அமைய உள்ளது. நாளை இரவு நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குடியரசு மாளிகையில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பழைய பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மஞ்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி, அப்னா தளம் தலைவர் அனுப்பிரியா படேல், லோக் ஜனசக்தி (ஆர்) தலைவர் சிராக் பஸ்வான், ஜனசேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண், ராஷ்டிரீய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற குழு தலைவராக (பிரதமர்) தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜ்நாத்சிங் முன்மொழிந்தார். அமித்ஷா, நிதின் கட்காரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வழிமொழிந்தனர். பிரதமர் மோடிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்ட புத்தகம் மீது தலைவைத்து மோடி வணங்கினார். கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தும், அடுத்த 5 ஆண்டுகால செயல்பாடு குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

இதற்கு முன்னதாக, கூட்டத்திற்கு வந்த நரேந்திர மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பூங்கொடுத்து வரவேற்றனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மோடிக்கு முன்னதாக வழங்கப்பட்ட பூங்கொத்தை தலைவர்கள் மாற்றி மாற்றி வழங்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News