நெருக்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கு.. சோனியா, ராகுல் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
- நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
- முதற்கட்ட வாதங்களை இன்றே தொடங்கலாம் என அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினர்.
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனத்துக்கு விற்கப்பட்டபோது முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர். எனவே அவர்கள் மீதும் விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கிலே அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிராகரித்தது.
5,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை படிக்க வேண்டும் என்பதால் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்க சோனியா காந்தி தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்தறை வழக்கறிஞர், விசாரணையை இன்றே தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதை ஏற்ற நீதிபதிகள் முதற்கட்ட வாதங்களை இன்றே தொடங்கலாம் என அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் விவரங்களை புகார்தாரர் சுப்பிரமணியன் சாமிக்கு அமலாக்கத்துறை வழங்கவும் உத்தரவிட்டனர்.