இந்தியா

தேசிய அவமானம்.. உத்ரகாண்டில் வடகிழக்கு இளைஞர் இனவெறியர்களால் அடித்துக் கொலை - ராகுல் கண்டனம்

Published On 2025-12-30 04:10 IST   |   Update On 2025-12-30 04:10:00 IST
  • "சீனாக்காரன்", "மோமோஸ் விற்பவன்" என்று சிறுமைப்படுத்தியுள்ளனர்.
  • பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகிறது

வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தரகாண்டில் இனவெறி தாக்குதலால் கொள்ளப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

24 வயதான ஏஞ்சல் சக்மா உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் எம்பிஏ பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 9-ம் தேதி, ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேல் ஆகியோர் டேராடூனில் உள்ள சந்தைக்குச் சென்றிருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஒரு கும்பல்அவர்களை இனரீதியாக இழிவுபடுத்தி பேசியுள்ளது. "சீனாக்காரன்", "மோமோஸ் விற்பவன்" என்று அவர்களைச் சிறுமைப்படுத்தியுள்ளனர்.

இதனை ஏஞ்சல் சக்மா தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த கும்பல் கையில் கிடைத்த கற்கள் மற்றும் இரும்புத் கம்பிகளால் ஏஞ்சல் சக்மாவை கொடூரமாக தாக்கியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாக உயிருக்கு போராடிய நிலையில், டிசம்பர் 26 அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மற்ற இந்திய மாநிலங்களில் உரிய பாதுகாப்போ குறைந்தபட்ச மரியாதையோ இல்லை என இனவெறி தாக்குதலுக்கு சகோதரனை பறிகொடுத்த மைக்கேல் வேதனையுடன் தெரிவித்தார்.

தொடக்கத்தில் இந்த விவகாரத்தில் காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த இனவெறி கொலைக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கரமான குற்றம். பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகிறது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

"இது ஒரு தேசிய அவமானம். நம் நாட்டு மண்ணிலேயே ஒரு இந்தியரை அந்நியர் போல உணரச் செய்வது நாகரீக சமூகத்திற்கு அழகல்ல," என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் எவரும் தப்ப முடியாது என்றும் உறுதியளித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியைத் தேட காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

இந்தக் கொடூரமான கொலையைக் கண்டித்து திரிபுராவில் மாணவர்கள் அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தினர்.   

Tags:    

Similar News